இலங்கையின் பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ஸ் மற்றும் புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்தளம் உள்ளுர் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று புத்தளத்தில் இடம்பெற்றது. பிரித்தானியா உயர் ஸ்தானிகர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு புத்தளம் வந்த போதே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இவ்விஜயத்தின் போது வடக்கு முஸ்லிம்களுக்கான சமாதான செயலக ஆணையாளர் எம். கே. எம். முஹைஸ் தலைமையிலான உயர் அதிகாரிகளைச் சந்தித்து இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் தொடர்பில் வடக்கு முஸ்லிம்களின் சமாதானச் செயலகத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையானார். இதனையடுத்து புத்தளத்தில் இயங்கும் சமூக நம்பிக்கை நிதியத்தின் (சீடிஎப்) ஏற்பாட்டில் புத்தளம் பாலாவி இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள் வாழும் மலீஹாபுரம் முகாமுக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகர் அங்கு பெண்கள் அபிவஜருத்திச் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதன்போது அவர்களின் பிரச்சினைகள், தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இவ்விஜயத்தின் போது சமூக நம்பிக்கை நிதியத்தின் திட்டப் பணிப்பாளர் மிஹ்லார் மலிக், உதவிப் பணிப்பாளர்களான மெளலவி நிஹ்மதுல்லாஹ், ஏ. சி. எம். சபீர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து புத்தளம் மொஹிதீன் ஜூம்ஆப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து புத்தளம் உள்ளுர் பிரதிநிகளுடனான சந்திப்பில் உயர் ஸ்தானிகர் கலந்து கொண்டார். புத்தளத்தில் இடம்பெயர்ந்த மற்றும் உள்ளுர் மக்களுக்கிடையில் காணப்படும் உறவுகள் கறித்தும் ஏனைய விடயங்கள் கறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பில் புத்தளம் பெரிய பள்ளியின் பிரதம நம்பிக்கையாளர் எஸ். ஆர். எம். முஸம்மில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் மாவட்டத் தலைவர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் சமாதான செலயகத்தின் புத்தளம் மாவட்டப் பொறுப்பாளர் எஸ். என். எல். சுகைல், புத்தளம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ். ஆர். எம். ஹினாயத்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
உயர் ஸ்தானிகரின் புத்தளம் விஜயத்தின் போது புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்னாண்டோ உட்பட பல அரச உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசினார்.
எம். எஸ். முஸப்பிர்
மதுரங்குளி நிருபர்
17. 10. 2008
No comments:
Post a Comment