From: Muzaffir
Sent: Wednesday, 31 December, 2008 2:14 PM
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக இன்று (செவ்வாய்) மேலும் மூன்று அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் தமது வேட்பு மனுக்களை புத்தளம் மாவட்டச் செயலகத்தில் புத்தளம் தெரிவத்தாட்சி அலுவலர் எம். கிங்ஸ்லி பெர்ணான்டோவிடம் கையளித்துள்ளன. ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, சமாஜவாதி சமாஜ கட்சி என்பனவே இன்று மனுத்தாக்கல் செய்த அரசியல் கட்சிகளாகும்.
நேற்று நண்பகல் வரை ஒரு அரசியல் கட்சியும் மூன்று சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. ஐக்கிய சோஷலிச முன்னணியே நேற்றுவரை வேட்பு மனுச் செய்த அரசியல் கட்சியாகும். இத்தேர்தலில் போட்டியிட மொத்தம் பத்து சுயேட்சைக் குழுக்கள் இன்று நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்தியிருந்தன.
இன்று அரச தரப்பு வேட்பு மனுவை அமைச்சர் மில்ரோய் பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் ஆகியோர் தாக்கல் செய்தனர். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரச தரப்புக்கு மாறிய முன்னாள் வடமேல் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக வடிகமங்காவ தலைமையிலான வேட்பாளர்களில் மூன்று முஸ்லிம்கள் அடங்குகின்றனர். முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என். டி. எம் தாஹிர், முன்னாள் கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ. எச். எம். றியாஸ் மற்றும் சட்டத்தரணி ஏ. எம். கமறுதீன் ஆகியோரே அம்மூன்று முஸ்லிம் வேட்பாளர்களாவர்.
ஏனைய அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் நாளை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.